முன்னிலை ஒருமை
போன ஜன்மத்தில் நீ ஒரு காக்கையாகப் பிறந்தது உனக்கு ஞாபகம் இருக்காது. நீ என்ன செய்தாய் தெரியுமா? ஒரு ஏழைப் பாட்டி தன் பிழைப்புக்காகச் சுட்டு விற்ற வடைகளில் ஒன்றைக் கௌவிக்கொண்டு பறந்து வந்து, இதோ, இந்த மரத்தின் முதல் கிளையில்தான் உட்கார்ந்தாய்.
அப்போது நான் உன்னைச் சோதிப்பதற்காக ஒரு குள்ளநரி வடிவில் உன்முன் தோன்றினேன். ஏன் உன்னைச் சோதிக்க நினைத்தேன் தெரியுமா? எனக்கும் என் நண்பனாகிய இன்னொரு தேவனுக்கும் போட்டி. காக்கைக்கு மூளையே கிடையாது என்பது என் கட்சி. “தவறு, ஒரு காக்கை குள்ளநரியைக் கூட ஏமாற்றும் அளவுக்கு புத்திசாலி. முன்பொரு முறை காக்கைக்கு தாகம் எடுத்து ஒரு தண்ணீர்க்குடத்தில் அமர்ந்தபோது அதில் கொஞ்சமே தண்ணீர் இருந்தது கண்டு அது சுற்றிலும் இருந்த கற்களை ஒவ்வொன்றாகக் கௌவிக் கொண்டு வந்து குடத்தில் போட்டு நீர்மட்டம் மேல்வரச் செய்து நீரருந்தியது உனக்கு நினைவில்லையா?” என்றான் அவன். எங்களுக்குள் பந்தயம். ஜெயிப்பவர் இந்திரன் அரண்மனையில் சேவகம் செய்யலாம்.
நீ மரக்கிளையில் அமர்ந்ததும் உன்னிடமிருந்து வடையைப் பறிப்பதற்காக உன்னை ஒரு பாட்டுப் பாடுமாறு நரி கேட்டதை இப்போது நீ ஒரு நீதிக் கதையில் படிக்கிறாய். ஆனால் கதையில் வருவது போல் அல்லாமல் உன் இனத்தில் இல்லாத அதிசயமாக அன்று நீ என்ன செய்தாய் தெரியுமா? பாவி, வடையைக் காலடியில் வைத்துக்கொண்டு உன் கரகர குரலில் என் இனத்தைச் சேர்ந்த நரியொன்று நீலச் சாயத் தொட்டியில் விழுந்த கதையைப் பாடி என்னைக் கேலி செய்தாய்.
நான் பந்தயத்தில் தோற்று இந்திர சேவக பதவியை இழந்ததாலும், நான் உருவெடுத்த நரியினத்தை நீ கேலி செய்ததாலும் நான் உன்னைச் சபித்தேன். என்ன சாபம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய்: “நீ மனிதனாகப் பிறந்தாலும் காக்கா பிடிக்காமல் எந்தக் காரியமும் நடக்காதிருக்கக் கடவாய்” என்ற சாபம் உன் இந்த ஜன்ம மனித வாழ்வில் எவ்வளவு உண்மையாகி விட்டது பார்த்தாயா? அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் நீ காக்கா பிடித்தாலும் மனிதரிடையே உள்ள குள்ளநரிகள் உன்னைத் தொடர்ந்து ஏமாற்றுவது உனக்கு இந்த ஜன்மத்தில் எங்கே புரியப்போகிறது?
உன் கதைப் பொறுமையாகக் கேட்டு உண்மை அறிந்ததற்கு நன்றி. போய்வருகிறேன், நீ உடல்நீத்து உயிராகும் போது மீண்டும் சந்திப்போம்.